மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப் படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் ஆழ்கடல், அண்மைக் கடல் பகுதிகளில் மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, ரோந்து செல்லும்போது படகில் இருக்கும் மீனவர்கள், இந்திய குடிமகன்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களை ஆய்வு செய்வது வழக்கம். சில நேரங்களில் மீனவர்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இனி வரும் காலங்களில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டின் கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மீனவர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்று இந்திய கடலோர காவல் படையின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் அனைத்து மீனவர்களும் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது ஆதார் அட்டையை கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.