தமிழகம்

உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொண்ட டெண்டர் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: விசாரணை நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமல் ஊரணி மற்றும்குளங்களை தூர்வாரவும், மத்தியஅரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கவும் அதிகாரிகளே தன்னிச்சையாக பிறப்பித்துள்ள டெண்டர் நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணையை நவம்பர் முதல் வாரத்துக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜோதி, தேவனேந்தல் ஊராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட 7 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:

பல்வேறு முறைகேடுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரணி மற்றும் குளங்களை தூர்வாருவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் பெறாமல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநர் உத்தரவுப்படி அதிகாரிகளே தன்னிச்சையாக டெண்டர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன்மூலம் பணி ஆணை வழங்கி ரூ.7.5 கோடியை மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து எடுத்து அதிகாரிகள் தன்னிச்சையாக இஷ்டம்போல செலவழித்துள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

இதேபோல கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 45 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.2,370 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.917 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் பெறாமல் அதிகாரிகளே டெண்டர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் பதவியேற்ற பிறகும் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் தலையிட்டு டெண்டர்களை இறுதி செய்வது என்பது ஏற்புடையதல்ல. இந்த திட்டத்தை அமல்படுத்துவது, நிர்வகிப்பது, கண்காணிப்பது, பராமரிப்பது என்பது உள்ளாட்சி மன்றங்களின் வேலை. ஆனால், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளைக் கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்.

தனி நீதிபதி உத்தரவு

மேலும் இதற்கான டெண்டர் நடவடிக்கைகள், வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளை ரத்து செய்யவேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து இருந்தோம். அரசியலமைப்புச் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை கவனத்தில் கொள்ளாமல் அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

எனவே, தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும். அத்துடன் அதிகாரிகள் தன்னிச்சையாக பிறப்பித்துள்ள டெண்டர் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியனும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT