மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலபாரதியின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, மவுலி வாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார்.
அதைத் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய கே.பாலபாரதி (மார்க்சிஸ்ட்), மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பாக ஒரு கருத்தை கூறினார். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் அவைக்கு திரும்பினர்.
அதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ‘‘குடிநீர் பிரச்சினைக் காக சென்னையில் கொளத்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு வெளியூர் களில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு குடங்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் மக்கள் யாரும் அதில் பங்கேற்கவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேரவைத் தலைவர் இருக்கை அருகே வந்து கோஷமிட்டனர். இதனால் பேரவை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பேரவை கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து 6-வது நாளாக திமுகவினர் வெளிநடப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.