சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 6-ம் கட்ட அகழாய்வை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட்டனர்.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.19-ம் தேதி முதல் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 4 இடங்களிலும் 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன.
கீழடியில் விலங்கின எழும்புகள், கட்டிட சுவர்கள், மண்பனைகள், கழிவுநீர் கால்வாய்கள், இரும்பு உலைகள், உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டன.
கொந்தகையில் குழந்தை மற்றும் பெரியவர்களின் எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிக்கள், கருவிகள், மணலூரில் சுடுமண் உலை, சிறிய ,பெரிய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகரத்தில் நீள வடிவ பச்சை நிற பாசிகள், எடைக்கற்கள், உறைகிணறு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 6-ம் கட்ட அகழாய்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். முன்னதாக அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வரவேற்றார்.
அகழாய்வு குறித்து தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் விளக்கினார்.