புதுச்சேரியில் இன்று புதிதாக 337 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 10) கூறியதாவது:
"புதுச்சேரியில் 4,829 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-241, காரைக்கால்-31, ஏனாம்-8, மாஹே-57 என மொத்தம் 337 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாணரப்பேட்டை எல்லையம்மன் கோயில் தோப்பு பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தொற்றால் பாதிக்கப்பட்டு, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.79 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 31 ஆயிரத்து 233 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,719 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 955 (83.10 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 24 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 147 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
நாளை (அக். 11) இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். சுகாதார ஊழியர்கள் சனி, ஞாயிறு கூட பார்க்காமல் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர். போதிய ஆட்கள் நியமிக்கப்பட்ட பிறகு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கி உள்ளோம்" .
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.