திருமாவளவன்: கோப்புப்படம் 
தமிழகம்

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி தொடராது என பொன்.ராதாகிருஷ்ணன் உணர்ந்துள்ளார்: திருமாவளவன் பேட்டி

அ.முன்னடியான்

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கம் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் தலித் இளம்பெண் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்தும், உ.பி. அரசைக் கலைக்க வலியுறுத்தியும் புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகே இன்று (அக். 10) நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

முன்னதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தலித் என்பதற்காக கடந்த ஓராண்டு காலமாக இருக்கையில் அமரவிடாமல் அவமதித்து வந்துள்ளனர். தேதியக் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அவரைத் தரையில் அமரவைத்து கூட்டத்தை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இப்படி அவமதிப்பும், அச்சுறுத்தலும் நீடித்த நிலையில் ஒரு மாதத்துக்குப் பின்னர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஊராட்சி மன்றச் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். என்றாலும் அந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 31-எம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள், இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அனைவருமே தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், அவர்கள் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எதிராகச் செயல்படுவது நீடிக்கிறது.

ஊராட்சி செயலாளர் பதவிக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டையில் மட்டுமல்ல 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. இருக்கைகளில் அமர முடியவில்லை. தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். கடலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள், எப்படி அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதனைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். இதனை விசாரிக்க தமிழகம் முழுவதும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 2,800-க்கும் மேற்பட்ட தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கம் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்துகின்றன. இன்னும் தேர்தலுக்குப் பல மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போதே சின்னம் குறித்த விவாதத்தை நடத்துவது திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துகின்ற ஒரு முயற்சி.

திமுக மட்டுமல்ல அதிமுகவும் கூட நிலையான சின்னம் இல்லாத கூட்டணிக் கட்சிகளைத் தங்களுடைய சின்னத்தில் போட்டியிடச் சொல்வது வழக்கமான ஒன்றுதான். சொந்த சின்னம் இல்லாமல் சுயேச்சை சின்னங்களில் நிற்பதால் எதிர்க்கட்சி கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. அவர்கள் வெற்றிபெற வாய்ப்பாகிவிடுகிறது என்ற கவலை அவர்களுக்கு உண்டு. பாதுகாப்பு கருதி வெற்றிக்குக் கூடுதலாக வாய்ப்புள்ள காரணத்தால் எங்கள் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று திமுக கேட்பதும், அதிமுக கேட்பதும் வழக்கமானதுதான்.

அதை நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்கிறார்கள் என்றுதான் நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள், ஒடுக்க நினைக்கிறார்கள் என்கிற எதிர்மறையான நிலையில் நாங்கள் அதனைப் பார்க்கவில்லை.

திமுகவோடு பாஜக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று அண்மையில் பொன். ராதாகிருஷ்னன் கூறினார். ஆகவே, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி தொடராது என அவர் உணர்ந்துள்ளார். நான் தொடக்கத்தில் இருந்து சொல்லி வருகிறேன். அதிமுக, பாஜகவுடன் போகாது. பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பொன். ராதாகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் உலக அரங்கில் நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகப் பொறுப்பேற்றபிறகு பெண்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. காரணம் யோகி ஆதித்யநாத் இப்படிப்பட்ட கொடுமைகளை குற்றச்செயலாக கருதக்கூடாத உளவியலைக் கொண்டவர்.

ஆகவே, அங்கு நடந்துள்ள சம்பவத்தை ஜனநாயக சக்திகள் தேசிய அளவில் கண்டித்தது ஒரு ஆறுதலை அளிக்கிறது. எனவே, மோடி அரசும், யோகி அரசும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். யோகி அரசை, மோடி அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT