ஒரு கிலோ அளவுள்ள பெரிய கர்ப்பப்பை கட்டியுடன் கரோனா தொற்று பாதித்த பெண்ணுக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரசவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த 36 வயதான 9 மாதக் கர்ப்பிணி, பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் கர்ப்பப்பையில் சுமார் 1 கிலோ அளவுள்ள பெரிய கட்டி இருந்தது தெரியவந்தது. இருப்பினும், வெற்றிகரமாகப் பிரசவம் நிகழ்ந்து, தாயும், சேயும் நலமாக வீடு திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், "பெரிய கட்டியுடன் அந்தப் பெண் கருத்தரித்ததே அரிது. இவ்வளவு பெரிய கட்டி இருக்கும்போது அவருக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அந்தக் கட்டியானது பிரசவத்தின்போது குழந்தை பிறப்பதற்கும் தடையை ஏற்படுத்தலாம். பிரசவத்துக்குப் பிறகும் நஞ்சு பிரியாமல் உதிரப் போக்கு ஏற்பட்டு தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
இதை அந்தப் பெண்ணிடமும், உறவினர்களிடமும் எடுத்துக் கூறி, அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அப்போது கர்ப்பப்பை கட்டி மிகவும் பெரியதாக இருந்ததால் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை எடுக்க மகப்பேறு மருத்துவர்கள் சிரமப்பட்டனர். இருப்பினும், நல்ல முறையில் பிரசவம் நிகழ்ந்தது. குழந்தை 2.75 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
கட்டி பெரிதாக இருந்ததால் உதிரப்போக்கும் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து, முன்பே தயார் நிலையில் வைத்திருந்த ரத்தம் பெண்ணுக்குச் செலுத்தப்பட்டது. கட்டியைப் பிரசவத்தின்போது எடுத்தால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும், வயது ஆக ஆக அதன் அளவு குறையும் என்பதாலும் பிரசவத்தின்போது கட்டியை அகற்ற வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
பின்னர், தொடர் கண்காணிப்புக்குப் பிறகு தாயும், சேயும் நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சிகிச்சையை மேற்கொண்ட மகப்பேறு மருத்துவத்துறை பேராசிரியர் கீதா, உதவிப் பேராசிரியர் நெஃபி, மயக்கவியல் துறை பேராசிரியர் கனகராஜ், உதவிப் பேராசிரியர் சசிகுமார், செவிலியர் ஆண்டாள் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்தார்.