மதுரை மாவட்டம், கருமாத்தூரில் கிண்ணிமங்கலம் தொல்லியல் கண்டுபிடிப்புகளும், தமிழ் பண்பாட்டுத் தோற்றமும் எனும் தலைப்பில் கலந்தாய்வரங்கம் இரு அமர்வுகளாக நடந்தது.
கலந்தாயவை தொடங்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி பேசும்போது, ‘‘மதுரையின் கிழக்கே கீழடி, மேற்கே கிண்ணிமங்கலம், புளி மான்கோப்பை போன்ற இடங்களில் தொல்லியல் பொருட்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கிடைப்பதால் மதுரை வட்டாரத்தை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்கவேண்டும்,’’ என்றார்.
முன்னாள் அமைச்சர், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ காணொலியில் பேசியதாவது:
கிண்ணிமங்கலத்திலுள்ள ஏகநாதன் குருமடம், சிவன் கோயில் புகழ்பெற்றது. அங்கு நடந்த அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ‘ ஏகஆதன் கோட்டம்’ என தமிழில் குறிக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்துக்கள் வளர்ந்த நிலையில் இருப்பதால் இதன் காலம் 2ம் நூற்றாண்டாக இருக்கலாம். ஆதன் என்ற சொல் சங்க காலம் முதலே உள்ளது. கோட்டம் எனும் தமிழ் சொல் அடங்கிய கல்வெட்டு முதன்முறையாக கிடைத்துள்ளது. மேலும், அங்கு கிடைத்த வட்டெழுத்து பலகை கல்வெட்டில் ஏகநாதன் பள்ளிப்படை மண்டலி என்ற சொல்லும் இடம் பெறுகிறது.
இதன்மூலம் ஏற்கனவே அங்கு போர் வீரனை வழிபடும் பள்ளிப்படை இருந்து, பிற காலத்தில் வழிபாடு தலமாக மாறியிருக்கலாம். சங்க காலம் முதல் சொக்கநாத நாயக்கர் காலம் வரை அங்கு கல்வெட்டுக்கள் காண்பதும், தற்போது வரை தொடர்ச்சியாக ஓரிடம் வழிபாட்டில் இருப்பதும் பெரிய விஷயம். பாண்டிய நாட்டுக்கான பள்ளிப்படைக்கு முன்பே கிண்ணிமங்கலத்தில் பள்ளிப்படை ஒன்று இருந்து, வழிபாடு நடத்திருக்க வாய்ப்புளளது. தமிழக தொல்லியல்துறை இதை உறுதி செய்கிறது. தமிழக வரலாற்றை யார் எழுதினாலும் கிண்ணிமங்கலம் சொல் இடம் பெறாமல் இருக்கமுடியாது.
அரிய கண்டுபிடிப்புகள் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன. வரலாற்றின் திருப்பு முனையாக, முக்கிய அரிய செய்திகளை சொல்லக்கூடிய இடமாக கிண்ணிமங்கலம் மாறியிருக்கிறது.
அங்கு கிடைத்திருக்கும் தகவல்களும் இதை உறுதி செய்கின்றன. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட காந்திராஜன் உள்ளிட்டோரை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவா மாநில அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இணையவழியில் பேசும்போது, ‘‘ கீழடி போன்று கிண்ணிமங்கலம் உகளவில் பேசப்படும். தமிழர் நாகரீகத்தின் தொட்டில் வைகை நதிக்கரை. கிண்ணிமங்கலத்தில் அறிவியல் ரீதியான அகழாய்வு செய்தால் உண்மை தெரியும்.
தென் தமிழகத்திற்கான தொல்லியல் அகழாய்வு மண்டல அலுவலகம் திருச்சியில் அமையவுள்ளது. இதை பயன்படுத்தி பல்வேறு அகழாய்வுகளை மேற்கொள்ளவேண்டும். கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடமாக மாறவேண்டும்,’’ என்றார்.
கலந்தாய்வரங்கில் அருளானந்த அடிகளார், தொல்லியல் அறிஞர் ராஜவேலு, செல்வகுமார், தொல்லியலாளர் காந்திராஜன், தொல்லியல் அலுவலர் ஆசைதம்பி மதுரைக் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் ரத்தினகுமார், ஆய்வாளர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.