தமிழகம்

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாகவும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை ) வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14-ம் தேதி உருவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வேப்பூர் (கடலூர்) 13 செ.மீ., ஒகேனக்கல் (தருமபுரி), மதுரை தெற்கு (மதுரை) தலா 8 செ.மீ., சேத்தியாத்தோப்பு (கடலூர்), ராசிபுரம் (நாமக்கல்) தலா 7 செ.மீ., மேலூர் (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), தல்லாக்குளம் (மதுரை), சோழவந்தான் (மதுரை), சூலகிரி (கிருஷ்ணகிரி), வீரகனூர் (சேலம்) தலா 6 செ.மீ., எடப்பாடி (சேலம்), புலிப்பட்டி (மதுரை), திருபுவனம் (சிவகங்கை), மங்களாபுரம் (நாமக்கல்), பென்னாகரம் (தர்மபுரி), பரமக்குடி (ராமநாதபுரம் ) தலா 5 செ.மீ.

நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 10 ஆம் தேதி அன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை அக்டோபர் 11 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலைகள் 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT