கி.வீரமணி: கோப்புப்படம் 
தமிழகம்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; அரசு மேல்முறையீடு செய்து தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்: கி.வீரமணி

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 10) வெளியிட்ட அறிக்கை:

"திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டியில் 12 வயதுச் சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிருபானந்தனை போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

35 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். ஒருவர், சம்பந்தப்பட்டவர், அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்ததாகவும் சாட்சியாகச் சொல்லியுள்ளார்.

சம்பந்தப்பட்டவரைக் கைது செய்ய, மக்கள் போராட்டம் நடத்திய பிறகே அவரைக் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே!

குற்றவாளி, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பிறகும் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்திருப்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய ஒன்று!

பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தச் சிறுமி, முடிதிருத்தும் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அரசுத் தரப்பில் வழக்கு சரியாக நடத்தப்படவில்லையா?

நீதிப் போக்கு இப்படி பட்டாங்கமான அநீதியாக தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிக்கலாமா? என்று மனம் நொந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களது சலூன்களை நேற்று நாடு தழுவிய அளவில் மூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மருத்துவ நலச் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று அறப் போராட்டம் நடைபெற்றது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து தவறான நீதிப் போக்கைத் தடுத்து நிறுத்தி, குற்றம் இழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தி, சரியான முறையில் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும். அவசரமான அவசியம் இது!

முடிதிருத்தும் தொழிலாளர்கள் உரிமை என்ன நாதியற்றதா? அவர்களும் மனிதர்கள் அல்லவா? ஏழை பாழைகளுக்கு நீதி என்ன எட்டாக் கனியா? குமுறுகிறது நம் நெஞ்சம். அண்மைக் காலத்தில் நீதிப்போக்கு மேலிருந்து கீழ்வரை, மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலையிலேயே உள்ளது!

சமூக விரோதிகளின் கொடுமை பளிச்சிடும் பாலின வன்கொடுமை வழக்குகளில் போதிய தனி கவனத்தைக் காவல்துறை செலுத்தியிருக்க வேண்டாமா? நீதிப் போக்கு இப்படி வெகுமக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாமா?

நீதிமன்றங்கள்தானே ஒரே கடைசி நம்பிக்கை நம் மக்களுக்கு? அங்கேயே நீதி கிடைக்கவில்லையானால், எங்கு போய் முட்டிக்கொள்வது?

கூடுதல் கவனம் தேவை!

எனவே, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இதுபோன்ற வழக்குகளில் தீவிர கூடுதல் கவனம் செலுத்தி, ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி கிட்டும் வண்ணம் தங்கள் கடமையை ஆற்றிட வேண்டும். நீதி வழங்க உடனடியாக ஏற்பாடுகள் தேவை!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT