மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வாலிபர் சங்கத்தைக் கட்டமைத்தவருமான கே.சி.கருணாகரன் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி:
''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான கேசிகே என்று அழைக்கப்படும் கே.சி.கருணாகரன் ( 74) உடல்நலக் குறைவால் வெள்ளியன்று (அக்.9) நள்ளிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம்.
அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அஞ்சலி செலுத்துவதுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். தொடக்க காலத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் மாநிலத் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டவர்.
மாநிலம் முழுவதும் சென்று இளைஞர்களை அணி திரட்டியவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து, நீண்ட காலம் அதன் மாநில நிர்வாகியாகச் செயல்பட்டவர். 1997 முதல் 2001 வரை கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். 23 ஆண்டு காலம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். தற்போது கோவை மாவட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.
சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இவர் தலைவராக இருந்தபொழுது, வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விளைவாக அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
காடம்பாறை மின்நிலைய கட்டுமானப் பணியில் தினக்கூலி தொழிலாளியாகப் பணியாற்றிய அவர், தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு காடம்பாறை தினக்கூலி தொழிலாளர்களின் நிரந்தரத்திற்காக கே.ரமணியுடன் தலைமையேற்றுப் போராட்டத்தை நடத்தியவர்.
கே.சி.கருணாகரன் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, கோவை மாநகரத்தில் அமைதி நிலவவும், மத நல்லிணக்கம் ஏற்படவும் முன்முயற்சி எடுத்தவர். 2001 முதல் 2006 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். இவர் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய காலத்தில், கோவை மாவட்டத்தில் வரன்முறைபடுத்தாமல் இருந்த இடங்களை வரன்முறை படுத்த சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் கொடுத்து அதை சட்டமாக்கக் காரணமாக இருந்தவர்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்றனர். உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும், பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காவும் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர். மிசா காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டவர். 50 ஆண்டுகாலம் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றியவர்.
கே.சி.கருணாகரன் அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். எளிமையானவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கோவை மாவட்ட மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மகள், மகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கோவை மாவட்டக் கட்சியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது''.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.