தமிழகம்

ஓமலூர் மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம், ஓமலூரில் நடந்த மாட்டுச் சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் திரண்டதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் பெருமாள்கோவில் மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும்.

இச்சந்தைக்கு சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதேபோல கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

இந்தியா முழுவதிலும் இருந்து மாட்டுச் சந்தைக்கு வரும் கால்நடை வியாபாரிகள், மாடுகளை விற்பனை செய்தும், வாங்கிச் செல்வதும் வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதமாக மாட்டுச் சந்தை நடத்த அரசு தடை விதித்து இருந்தது. தற்போது தளர்வுகள் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக மூடப்பட்டு இருந்த பெருமாள்கோவில் மாட்டுச் சந்தை நேற்று திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை தொடங்கிய மாட்டுச் சந்தைக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடு வாங்கவும், விற்பனை செய்யவும் வந்திருந்தனர். மாட்டுச் சந்தையில் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், கன்றுக் குட்டிகள் உட்பட சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

கால்நடைகள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு, விற்பனை நடந்த நிலையில் கூட்டம் கூட்டமாக அருகருகே வியாபாரிகள் நின்று பேரம் பேசினர். இச்சந்தையில் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

சந்தையை திறக்க அதிகாரிகள் எந்தவித வழி காட்டுதல்களையும் பிறப்பிக்கவில்லை. அரசு அறிவித்த தளர்வுகளின்படி சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்களே சந்தையை திறந்துள்ளனர். சந்தைக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யவில்லை. கிருமி நாசினி மருந்து தெளிக்கவில்லை. கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை. கைகளை கழுவுதல், கிருமிநாசினி தெளித்தல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் மாட்டுச் சந்தை நடந்து முடிந்துள்ளது.

சந்தைக்கு அதிகாரிகள் வராததால் பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்று சேலம் மாவட்டத்தில் மேலும் பரவும் அபாயம் ஏற்படக் கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.ஓமலூரில் நடந்த மாட்டுச் சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டபோது, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை எதுவும் கடைப்பிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள அச்சம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT