வடகிழக்கு பருவமழை சீராக பெய்ய வேண்டி புதூர் அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சி ஒப்பாரி வைத்து அழுதனர். 
தமிழகம்

மழை பெய்ய வேண்டி அயன் வடமலாபுரத்தில் அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி விவசாயிகள் வழிபாடு

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை சீராகபெய்ய வேண்டி அயன்வடமலாபுரம் கிராமத்தில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சி வழிபாடு நடத்தினர்.

கடந்த 15 ஆண்டுகளாக அதிகமாக பெய்தும், பெய்யாமலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடையில் நன்றாக மழை பெய்ததைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றஎதிர்பார்ப்புடன் கோவில்பட்டி பகுதியில் உள்ள மானாவாரிநிலங்களில் முதல் கட்டமாகமக்காச்சோள விதைகளைஊன்றிமழைக்காக விவசாயிகள் காத்திருந்தனர்.

ஆனால், புரட்டாசி முதல்வாரக் கடைசியில் தொடங்கவேண்டிய வடகிழக்குப்பருவமழை 4-வது வாரம் வந்த நிலையில் கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

தொடர்ந்து வெயில்வாட்டி வருவதால் தாழ்வான பகுதிகளில் ஓரளவும், காய்ந்த மேட்டுப் பகுதியில் வளராமலும் பயிர்கள்வளர்ச்சி குன்றி காணப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் புதூர் அருகே எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட அயன் வடமலபுரம் கிராமத்தில் மழை நன்றாக பெய்ய வேண்டும் என்பதற்காக, ஊரின் வடகிழக்குபகுதியில் உள்ள மானாவாரிநிலத்தில் உள்ள வடக்குத்திஅம்மனுக்கு கஞ்சி காய்ச்சி வழிபாடு நடத்தினர். அப்போது ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் கஞ்சியை அனைவருக்கும் வழங்கினர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ‌. வரதராஜன் கூறும்போது, ‘‘இந்தாண்டு கோடையில் மழை பெய்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என நம்பி இருந்தோம். தற்போது புரட்டாசி 4-வது வாரத்தை தொடும் நிலையில் பருவமழை தொடங்கவில்லை. இதனால் வழக்கமான ஐதீகப்படி மழைக்கஞ்சி காய்ச்சி, வழங்க முடிவு எடுத்தோம்.

முதல் 2 நாட்கள் விவசாயிகளின் வீடுகளில் கஞ்சி காய்ச்சிஅனைவருக்கும் வழங்குவோம். 3-வது நாள் வீடுகளில் கஞ்சி காய்ச்சி ஊரில் வடகிழக்கு மூலையில் உள்ள மானாவாரி நிலத்துக்கு எடுத்துவருவோம். அங்கு வடக்குத்தி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, அங்கும் கஞ்சி காய்ச்சி அம்மனுக்கு படைப்போம்.

மழை இல்லாமல் விவசாயிகள் துயரப்படுவதை உணர்த்தும் வகையில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவார்கள். அதன் பின்னர் கஞ்சியை அனைவருக்கும் பனை

ஓலையில் வழங்குவோம். இதற்கு முன் இதுபோல் மழை பெய்யாத காலங்களில் பூஜை முடித்து விவசாயிகள் வீடு செல்லும் முன் மழை பெய்துள்ளது. எனவே, தற் போதும் மழை பெய்யும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT