நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், நர்ஸிங் மாணவிக்கு கல்விச்சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததால் விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவமனை முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு, ஆயவிளை பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் .இவரது மகள் வேதிகா மோகன் (20). திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி நர்ஸிங் படித்து வந்தார். தேர்வு நேரத்தில் இவருக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழ் கிடைக்காததால், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் தனியார் கல்லூரியில் சேர்ந்து பிஎஸ்சி நர்ஸிங் பயின்றார்.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில், மாணவிக்கு ஜாதிச் சான்றிதழ் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கிராம நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஜாதிச் சான்று கிடைக்காமல் போனது.
அதேவேளை, ஆட்டோ ஓட்டுநரான இவரது தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தனது தாயுடன், பல அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கியும் சான்றிதழ் கிடைக்காததால் மன அழுத்தம் காரணமாக பல முறை தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் விஷம் குடித்தார். மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், `நீதிமன்ற உத்தரவின்படி முறையாக சான்றிதழ் வழங்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கோரி, மாணவியின் சொந்த ஊரான ஆயவிளை கிராம மக்கள் மருத்துவமனையின் முன் குவிந்தனர். மாணவியின் கிராமம் மற்றும் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.