பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 125 ஆண்டுகள் ஆகின்றன. இந்நாளை பொங்கல் உள்ளிட்ட வழிபாடுகளுடன் விவசாயிகள் கொண்டாட உள்ளனர்.
முல்லை பெரியாறு அணை. கேரளப் பகுதியில் இருந்தாலும் இதற்கான நீர்வரத்து பகுதி விருதுநகர் மாவட்டம் சேத்தூர், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதி மலை களில் அமைந்துள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாகவும், 2.40 லட்சம் ஏக்கரும், மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களும் இந்த அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன.
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் கட்டி முடித்து, 1895-ம் ஆண்டு அக் டோபர் 10-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று மாலை 6 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வெல்லாக் தேக்கடிக்கு வந்து பெரியாறு அணைத் தண்ணீரை தமிழகப் பகுதிக்கு திறந்து வைத்தார்.
இந்த நாளை தென் மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதன்படி இன்று காலை 8.30 மணிக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணி மண்டபம் அருகே பொங்கல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து அருகே உள்ள பகவதியம்மன் கோயிலில் அணை கட்டும் பணியில் உயிரிழந்தவர்கள் நினைவாக பிரார்த்தனை செய்யப்படும். பின்னர் பழங்குடியின மக்களான முதுவான்கள் ஆடு வெட்டி பாரம் பரிய வழிபாடு நடத்த உள்ளனர்.
மேலும் 5 மாவட்டங்களிலும் விழா நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் கூறுகையில், முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவில் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்துள்ளோம் என்றார்.