தமிழகம்

மாவட்டம் முதல் மாநிலத் தலைமை வரை அதிமுகவில் ஓங்கிய திண்டுக்கல் சீனிவாசனின் கை

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் முதல் மாநில அளவில் கட்சியில் பல்வேறு பொறுப்புகளைப் பெற்ற தன் மூலம் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் செல்வாக்கு அதிமுகவில் அதிகாித்துள்ளது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பத்து ஆண்டுகள் தன்னை அதிமுகவில் நிலைநிறுத்திக்கொள்ளவே திண்டுக்கல் சி.சீனிவாசன் போராடினார். அதிமுகவில் மாநில பொருளாளர் என உயர்ந்த பொறுப்பை வகித்த அவர், திடீரென இறங்கு முகமாகி, திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் ஆக்கப்பட்டார்.

இதில் அவரது கட்சியினரே மு.க.அழகிரி முன்னிலையில் திமுகவில் சீனிவாசன் இணையப் போகிறார் என கிளப்பி விட்டனர். பின்னர் கட்சித் தலைமையிடம் விளக்கம் சொல்லி தன்னை கட்சியில் நிலைநிறுத்திக் கொள்ளவே பெரும் பாடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுகவிலும், கட்சித் தலைமை யிலும் போதிய செல்வாக்கு இன்றி பத்து ஆண்டுகளாக வலம் வந்த அவருக்கு 2016 தேர்தல் அதிர்ஷ்டத்தை தந்தது. சட்டசபைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் நத்தம் ஆர்.விசுவநாதன் தோல்வியடைய,திண்டுக்கல் தொகுதியில் சி.சீனிவாசன் வெற்றிபெற்றார். இதனால் திண்டுக்கல் மாவட்டத்துக்கான அமைச்சர் பதவி சீனிவாசனுக்கு இடம் மாறியது. இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், அமைச்சர், கட்சித் தலைமையிலும் முக்கியமான நால்வர் அணியில் ஒருவர் என கோலோச்சி வந்த நத்தம் ஆர்.விசுவநாதனுக்கு சட்டசபைத் தேர்தல் தோல்வி இறங்குமுகத்தை தந்தது. அதேநேரம், திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு ஏறுமுகத்தை தந்தது. தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை ஆதரித்து வந்தவருக்கு கட்சி வழிகாட்டு குழுவில் இடம் கிடைத்துள்ளது.

தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி முதல் மாநில அமைப்புச்செயலாளர் பதவியுடன், அதைவிட உயர் பதவியான வழிகாட்டுக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அரசியல் செய்த நத்தம் ஆர்.விசுவநாதன், அணிகள் பிரிவின் போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

அணிகள் இணைந்தபோது மாநிலங்களவை எம்பி. பதவி பெறுவது,வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறுவது என முயற்சித்தும் நிறைவேறாமல் போனது. தற்போது பிரிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியில் மட்டும் அரசியல் செய்யவேண்டிய நிலை முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதனுக்கு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT