‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:
பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்
அரும்பாக்கத்தில் எம்எம்டிஏ மார்க்கெட் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால், அதற்கு அடையாளமாக அறிவிப்பு பலகையோ, நிழற்குடையோ அங்கு அமைக்கப்படவில்லை. பஸ் ஓட்டுநர்கள் தோராயமாக இடத்தை அடையாளம் கண்டு பயணிகளை இறக்கிவிட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பஸ் நிற்குமிடம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் அப்பகுதியில் நிழற்குடை ஒன்றை நிறுவ வேண்டும்.
எச்.பாஷா.அரும்பாக்கம்.
***
தாமதமாக வரும் மகளிர் ரயில்
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே காலை 9.09 மணிக்கு மகளிர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பல நேரங்களில் இந்த ரயில் காலை 9.19 மணிக்குத்தான் இயக்கப்படுகிறது. இந்த தாமதத்தால் காலை 9.19 மணிக்கு இயக்கப்பட வேண்டிய பொது ரயில் காலை 9.29 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால் பொது ரயிலில் செல்வோர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. கூட்டமும் அதிகமாக சேர்ந்து விடுகிறது. அலுவலகத்துக்கும் நேரத்தோடு செல்ல முடிவதில்லை. எனவே மகளிர் மின்சார ரயிலை, அதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ராஜேந்திரன்,கூடுவாஞ்சேரி.
***
ரயில்வே உணவகத்தில் குடிநீர் இல்லை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்களுக்கு குடிக்கவோ, கை கழுவவோ குடிநீர் இலவசமாக வழங்கப்படுவதில்லை.
பாட்டில் குடிநீரை கட்டணம் செலுத்தி வாங்கி பயன்படுத்துமாறு உணவக நிர்வாகத்தினர் அறிவுறுத்துகின்றனர். அதனால் இந்த உணவகங்களில் இலவசமாக குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஜெயச்சந்திரன்,எண்ணூர்.
***
மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்
சென்னை வர்த்தக மையத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி மாநகரின் பல்வேறு சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டன. விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலேயே, மாநகரின் பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதனால் அகற்றப்பட்ட வேகத்தடைகளை, அதே இடத்தில் உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர், கோட்டூர்புரம்.
***
குப்பைத் தொட்டி வைக்க கோரிக்கை
கோவிலம்பாக்கத்தில் வைத்தியலிங்கம் நகர் பகுதியில் குப்பைத் தொட்டி எதுவும் வைக்கப்படாததால் அங்குள்ள கால்வாய் ஓரத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். காற்று அடிக்கும்போதும், விலங்குகளாலும் கால்வாயில் குப்பை விழுந்துவிடுகிறது. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி, நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மேலும் மழைக் காலங்களில் மழை நீர், கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வந்துவிடுகிறது. அதனால் அப்பகுதியில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.
வாசகர், கோவிலம்பாக்கம்.
***
சாலையை சீரமைக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம்- மப்பேடு வரையிலான சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அச்சாலையில் ஒரு அடி ஆழத்துக்கு மேல் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகிவிடுகின்றன. தற்போது அந்த பள்ளங்களில் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அவை நிரவப்படாமல், குவியல் குவியலாக சாலையில் கிடக்கின்றன. இதனால் சாலையில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர், பேரம்பாக்கம்.
அன்புள்ள வாசகர்களே..
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.