விளாத்திகுளம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் அக்கட்சியில் இணைந்தார். மார்க்கண்டேயன் தலைமையில் தொழிலதிபர்கள் கரையடிசெல்வன், கே.செல்வகுமார், அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இனாம் அருணாசலபுரம் ஆர்.துரைபாண்டியன், ஆற்றங்கரை வி.சீத்தாராமன், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் சி.விநாயகமூர்த்தி, ஒன்றிய இணைச் செயலாளர் அ.பாலமுருகன், மேலநம்பிபுரம் ஊராட்சி செயலாளர் எஸ்.பாலமுருகன், எஸ்.செல்வகுமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி த.தவசி ஆகியோரும் நேற்று திமுகவில் இணைந்தனர்.
ஸ்டாலின் வரவேற்பு
கட்சியில் இணைந்த அனைவருக்கும் திமுக உறுப்பினர் அட்டையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இளைஞரணி நிர்வாகி விரிசம்பட்டி வி.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல சென்னை துறைமுகம் பகுதி அதிமுக முன்னாள் செயலாளரும், ஜார்ஜ்டவுன் நகர கூட்டுறவு வங்கி இயக்குநருமான எம்.வி.ஆர்.சரவணகுமாரும் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அப்போது சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.