தமிழகம்

இபிஎஸ், ஓபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு: நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர்

செய்திப்பிரிவு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், 3-வது நாளாக முதல்வரையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நடிகர், நடிகைகள் சந்தித்தனர்.

அதிமுகவில் பல நாட்களாக நீடித்துவந்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிசாமி கடந்த7-ம் தேதி அறிவிக்கப்பட்டார். கட்சியை வழிநடத்த வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 3 நாட்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரை அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சந்தித்து வருகின்றனர்.

3-வது நாளாக நேற்று, முதல்வர் பழனிசாமியை திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்து, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட அமமுகவில் இருந்து பலர் விலகி, அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியுடன் வந்து முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்கள், ஓபிஎஸ்ஸையும் சந்தித்தனர்.

இதுதவிர, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா, நடிகர் மனோபாலா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஓபிஎஸ்ஸை அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், துணைச் செயலாளர் க,தவசி, முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரகீம், புதுச்சேரி எம்எல்ஏ அன்பழகன், தலைமைக் கழக பேச்சாளர் ஏ.நூர்ஜகான், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடசந்தூர் எம்எல்ஏவுமான விபிபி பரமசிவம், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, கம்பம் எம்எல்ஏவான எஸ்டிகே ஜக்கயன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.எம்.பாபு, இலக்கிய அணி துணைச் செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.தங்கவேல் ஆகியோர் சந்தித்தனர்.

SCROLL FOR NEXT