தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிடடு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழமைமிக்க அஞ்சல் பெட்டியை, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் செல்வகுமார் அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை வட்ட அஞ்சல் துறைத் தலைவர் சுமதி ரவிச்சந்திரன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு திருவிதாங்கூர் சமஸ்தான தபால் பெட்டி அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் அர்ப்பணிப்பு

செய்திப்பிரிவு

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிடடு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அஞ்சல்துறை துறையின் பழமைமிக்க அஞ்சல் பெட்டியை, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் செல்வகுமார் அர்ப்பணித்து வைத்தார்.

ஆண்டுதோறும் அக். 9-ம் தேதி முதல், ஒருவாரம், அஞ்சல் வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அஞ்சல் வார விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அஞ்சல் துறையின் பழமைமிக்க அஞ்சல் பெட்டியை, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் பி. செல்வகுமார் அர்ப்பணித்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா ஊரடங்கால் அஞ்சல் துறைக்கு கடந்த 6 மாதங்களில் 40 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், கடந்த 2 மாதங்களாக அதில் இருந்து அஞ்சல் துறை படிப்படியாக மீண்டு வருகிறது.

கரோனா ஊரடங்கு காலத்தில் பிற வங்கிகளில் இருந்து ரூ.250 கோடி வரை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் அஞ்சல் நிலையங்கள் அரசு சேவைகளை வழங்கும் மையங்களாகத் திகழும். தமிழகம் முழுவதும் இதுவரை 250-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர்” என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சல் துறைத் தலைவர் (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) சாருகேசி கூறும்போது, “கரோனா காலகட்டத்தில் முகக் கவசங்கள், மருந்துப் பொருட்கள், கரோனா தடுப்பு பொருட்கள் என பலவற்றையும், மாநிலங்கள் கடந்தும் பார்சல் சேவை மூலம் தமிழக அஞ்சல் துறை வழங்கி வந்தது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை வட்ட அஞ்சல் துறைத் தலைவர் சுமதி ரவிச்சந்திரன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT