திருவனந்தபுரம் கல்லூரியில் சித்த மருத்துவம் படிக்கும் 39 தமிழக மாணவர்களை 3 ஆண்டுகளாக தேர்வு எழுத கேரள அரசு அனுமதிக்கவில்லை. முதல்வர் பழனிசாமி தலையிட்டு மாணவர்களின் கல்வியும், வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் சிந்திகிரி சித்த மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் சித்த மருத்துவம் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மற்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும் அம்மாநில அரசு, கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த 39 மாணவர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக மாணவர்கள் தேர்வு எழுத உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடாவும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி மற்றும் பாமக இளைஞர் அணித் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ஆகியோர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலையிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் தேர்வு எழுத தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
இந்த கல்லூரியில் இளநிலை சித்த மருத்துவப் படிப்பில் 2016-ம் ஆண்டு சேர்ந்த 26 பேர், 2017-ம் ஆண்டு சேர்ந்த 13 பேர் என மொத்தம் 39 தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திலும் மாணவர்களின் பெயர் பதிவுசெய்யப்படவில்லை. நுழைவுத்தேர்வு எழுதாமல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்ததாக கேரள மாநில தேர்வுத் துறை அதிகாரிகள் சொல்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை என 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அப்போது நீட் தேர்வும் இல்லை.
கேரள அரசின் அரசாணைப்படிதான் கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தியது. 2015-ம் ஆண்டு சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 2016, 2017-ம் ஆண்டுகளில் சேர்ந்த தமிழக மாணவர்கள் 39 பேரை மட்டும் தேர்வு எழுத அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம். இதனால், மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் கல்வி பாதிக்காமல் தேர்வு எழுத தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.