சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் தொற்று அதிகமாக உள்ள 70 இடங்களில் தகரங்களால் தடுப்பு ஏற்படுத்தி, அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 இடங்களிலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 இடங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். நேற்று தண்டையார்பேட்டை மண்டலம், சுனாமி குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை எண்ணிக்கையில், தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 6 சதவீதத்துக்கும் கீழ் இது குறைந்துள்ளது.
சென்னையில் உள்ள சில மண்டலங்களில், குறிப்பிட்ட சில பகுதிகள், கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் தொற்று அதிகரித்துள்ளது. அங்கெல்லாம் முகக் கவசம் அணியும் பழக்கம் சற்று குறைந்துள்ளது. 30 சதவீதம் பேர் முகக் கவசம் அணிவதில்லை. அதை அணிய வீடுவீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முன்கூட்டியே பரிசோதனைக்கு வந்தால் நோயை குணப்படுத்த முடியும்.
தற்போது இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது. இதை 1 சதவீதத்துக்கும் கீழ் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு துறைக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை முறையாக பொதுமக்களும், நிறுவனங்களும் கடைபிடித்தாலே, தொற்று குறைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.2.5 கோடி அபராதம்
சென்னையில் முகக் கவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் மட்டும் ரூ.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.