தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும்.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான முதல் தவணைகிருஷ்ணா நீர் கடந்த மாதம்18-ம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து, விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு நேற்று காலைநிலவரப்படி, விநாடிக்கு 690 கன அடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது. இது பூண்டி ஏரியை அடையும்போது விநாடிக்கு 652 கன அடியாக குறைகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி இரவு முதல், நேற்று மதியம் வரை ஜீரோ பாயின்டுக்கு 1,211 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர் வந்துள்ளது.
இதனால், கடந்த மாதம் 20-ம் தேதி 87 மில்லியன் கன அடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர் இருப்பு ஒரு டிஎம்சி-யை தாண்டியுள்ளது.
3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 1,135 மில்லியன் கன அடி ஆகும். இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.