தமிழகம்

இயற்கை முறையிலான விநாயகர் சிலைகளை நிறுவும் இந்து அமைப்புகள்: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை தடுக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண், காகிதக் கூழ் உள்ளிட்ட இயற்கை முறையிலான விநாயகர் சிலைகளை இந்து அமைப்புகள் நிறுவி வருகின்றன. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயாரிக்கப்படும் சிலைகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விநாயகர் சிலைகளை உருவாக் கும் பணிகள் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. தமிழகத்தில் மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கோவை, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

விநாயகர் சிலைகளுக்கு மெருகூட்ட வேண்டும் என்பதற்காக வர்ணப்பூச்சுகளையும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற ரசாயன வகைகளையும் சிலர் பயன் படுத்தினர். இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு சிலை தயாரிக்க தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளின் மூலமே 90 சதவீதம் விநாயகர் சிலைகள் நிறுவப்படுகின்றன.

இந்து முன்னணி அமைப்பு தங்களுக்கான சிலைகளை சென்னை ரெட்டேரி, செங்குன்றம், எர்ணாவூர் பகுதி களில் தயாரித்து அதன் தொண்டர் களுக்கு விநியோகித்து வருகிறது. அந்த சிலைகள் அனைத்தும் களி மண், காகிதக் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் உருவாக்கப்படுவ தாக அதன் சென்னை மாநகர செயலாளர் முருகேசன் கூறினார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சி.டி.செந்தில்குமார் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவை அனைத்துமே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகளை நாங்கள் எப்போதுமே தவிர்க்கிறோம். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயாரிக்கப்படும் சிலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT