தமிழகம்

பாடசாலைகளாக மாறும் சிறைச்சாலைகள்: முதல்முறையாக திருச்சி சிறையில் அரசு ஐடிஐ தொடக்கம் - 5 பிரிவுகளில் 168 கைதிகள் சேர்க்கை

அ.வேலுச்சாமி

தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சி மத்திய சிறையில் அரசு ஐடிஐ தொடங்கப்படுகிறது. இங்கு 5 பாடப்பிரிவுகளில் 168 கைதிகள் சேர்க்கை அனுமதி அளிக்கப்பட உள்ளது.

சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு அமைப்புகள் மூலம் ஆயத்த ஆடை, ஹாலோபிளாக், காகிதப்பை, இனிப்பு- காரம் தயாரித்தல், காளான் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளை சிறை நிர்வாகம் தற்போது அளித்து வருகிறது. இப்பயிற்சி பெற்ற கைதிகளில் பலர், விடுதலையான பிறகு மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல், நல்வழிக்குத் திரும்பி சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சிறைகளில் பிற அமைப் புகளுக்குப் பதில், தமிழக அரசே நேரடியாக சிறைவாசிகளுக்கு தொழிற்பயிற்சிகளை அளிக்க முன்வந்துள்ளது. இதன்படி புழல்-1, புழல்-2, திருச்சி, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் ஆகிய 9 மத்திய சிறைகள், புதுக் கோட்டையிலுள்ள பாஸ்டல் பள்ளி ஆகிய 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களை (ஐடிஐ) அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் நடப்பாண்டிலேயே அரசு ஐடிஐ தொடங்குவதற்கான அரசா ணையை தமிழக அரசு அண்மையில் பிறப்பித்தது. பிட்டர் (2 ஆண்டுகள்), எலெக்ட் ரீஷியன் (2 ஆண்டுகள்), கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (1 ஆண்டு), டெய்லரிங் (1 ஆண்டு), வெல்டர் (1 ஆண்டு) ஆகிய 5 பாடப்பிரிவுகள் இங்கு பயிற்றுவிக்கப்பட உள்ளன.

இதற்கு தேவையான கட்டிட வசதி, மும்முனை மின்சார வசதி, பயிற்சிக்கான இயந்திரங்கள், தளவாடங்களை நிறுவும் பணிகள் திருச்சி சிறை வளாகத்தில் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக ரூ.3.65 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதவிர ஐடிஐ முதல்வர், பயிற்சி ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என 36 பணியிடங்களும் உடனடியாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. திருச்சி சிறை ஐடிஐ முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பி.பரமேஸ்வரி நேற்று மத்திய சிறைக்குச் சென்று கண்காணிப்பாளர் ஆ.முருகேசனை சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி மத்திய சிறை கண்காணிப் பாளர் ஆ.முருகேசன் கூறும்போது, “முதல் வரின் உத்தரவுப்படி அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் தமிழகத்திலேயே முதல்முறையாக இங்கு அரசு ஐடிஐ தொடங்கப்படுகிறது. நிரந்தரக் கட்டிடம் கட்டும் வரை, தற்காலிகமாக சிறையின் 7-வது பிளாக்கில் இந்த ஐடிஐ செயல்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று இச்சிறையிலுள்ள 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சேர்க்கை அனுமதி அளிக்கப்படும். இதில் ஆயுள் தண்டனை பெற்றவர்களும் அடங்குவர்” என்றார்.

SCROLL FOR NEXT