தமிழகம்

கோகுல்ராஜ் கொலையில் 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு

கி.மகாராஜன்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவர் 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.

முதலில் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கோகுல்ராஜின் தாயார் சித்ரா, விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிதர், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், சுரேஷ், பிரபு ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இவர்களின் மனுவை நீதிபதி ஆர்.தாரணி விசாரித்தார். ''மனுதாரர்களுக்கு தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். எனவே, ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT