திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைக் தண்டிக்கும் வகையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஜி.குரும்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். முடிதிருத்தும் தொழிலாளி. இவரது 12 வயது மகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்கமடைந்த நிலையில் மின்சார வயரை மூக்கிலும், வாயிலும் செலுத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் குற்றவாளி என அறிந்து வடமதுரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துத் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மருத்துவர் நலச் சங்கம், முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்க தேனி மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், சமூகநலப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முகமது சபி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ''குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் இருக்க, அரசே மேல்முறையீடு செய்ய வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இக்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினர். பின்பு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.