தமிழகம்

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் அவசரம் ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

கி.மகாராஜன்

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைச் செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள், அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் மட்டும் அவசரம் காட்டுகின்றனர் என உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான தாமதத்தை அனுமதிக்கக் கோரிய மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ''தனி நீதிபதி 2018-ல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படுவதில்லை. இதனால் 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். அதே நேரத்தில் அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் அவசரம் காட்டப்படுகிறது. அந்த வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க அதிகாரிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்க வேண்டும். இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வித் துறை அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரிகளுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோர் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT