தமிழகம்

பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

எஸ்.கோமதி விநாயகம்

பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் தலைவர் இல்லை. பாஜகவும், தொகுதி மக்களும் அவரை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே தெற்குக் கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.13-ம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அவர் வருவதால், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் தலைவர் இல்லை. பாஜகவும், தொகுதி மக்களும் அவரை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது. அவரது பேச்சைக் கருத்தில் கொள்ள வேண்டாம். கூட்டணி குறித்து பாஜக மேலிடம் தெரிவிக்க வேண்டும் அல்லது பாஜகவின் தலைவர் கூற வேண்டும். இங்கே பாஜக தலைவராக முருகன் உள்ளார். இந்தக் கூட்டணி தொடரும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். திமுக அதிகாரத்தில் இருந்த காலத்தில் கச்சத்தீவு, காவிரியைத் தாரை வார்த்தவர்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நீதிக்குப் போராடியது இல்லை. அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது எதுவும் செய்யாமல், அரசியலுக்காகத் தற்போது பேசுகின்றனர்.

உரிமை, உணர்வுப் பிரச்சினைகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்துவார்''.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT