மரப்பொம்மைக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுவினர். 
தமிழகம்

தமிழகத்தில் முதல் மகளிர் குழுவாக பிளிப்கார்ட் சந்தையில் விற்பனையைத் தொடங்கிய 'எல்லோ ரோஸ்': மரப்பொம்மையை விற்றுப் பாராட்டு

வ.செந்தில்குமார்

தமிழகத்தில் முதல் முறையாக வேலூரைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தயாரித்த மரப்பொம்மை பிளிப்கார்ட் சந்தையில் விற்பனையைத் தொடங்கியிருப்பது பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தை ஈட்டி வருகிறது. சிறு நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தத் தளத்துக்குச் சென்று வாங்க முடியும். இந்த நிறுவனங்கள் கிராம அளவிலான சிறு, சிறு குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பையும் வழங்கி வருகின்றன. சில பிரத்யேக கலைப் பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் அதிக வருவாய் ஈட்ட முடியும்.

அந்த வகையில் வேலூர் காங்கேயநல்லூர் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வரும் 'எல்லோ ரோஸ்' (Yellow Rose) மகளிர் குழுவினர் தயாரித்த மரப்பொம்மை பிளிப்கார்ட் தளத்தில் முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மகளிர் குழு பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் முதல் விற்பனையைச் செய்த பெருமை, 'எல்லோ ரோஸ்' குழுவுக்குக் கிடைத்திருப்பதை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டியுள்ளார்.

வேலூர் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜெயகாந்தன் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுவினரின் உற்பத்திப் பொருட்களை 'வெல்மா' என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறோம். இதில், கண்ணாடி ஓவியம், கைத்தறி லுங்கி, சேலைகள், மரப் பொம்மைகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை மட்டும் பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். இதில், முதலாவதாக மரப் பொம்மை விற்பனையாகியுள்ளது" என்றார்.

தமிழ்ச்செல்வி

'பிளிப்கார்ட்' சந்தை வாய்ப்பு கிடைத்தது குறித்து 'எல்லோ ரோஸ்' மகளிர் குழுவின் நிர்வாகி தமிழ்ச்செல்வி கூறும்போது, "சிறுவர்களுக்குப் பிடித்தமான பொட்டி குதிரை, நடை வண்டி, மரச்சக்கரம் பொருத்திய குதிரை, ஒட்டகம், வாத்து, கிளி என 25 வகையான பொருட்களைத் தயாரிக்கிறோம். மகளிர் குழுவினருக்கான தயாரிப்புப் பொருட்களுக்கான கண்காட்சியில் பங்கேற்றோம்.

மகளிர் திட்டத்தின் உதவியுடன் பிளிப்கார்டில் எங்கள் பொருட்களை விற்பனை செய்வது குறித்த நடைமுறைப் பயிற்சியும் அளித்தனர். இப்போது, பெங்களூருவில் இருந்து முதல் ஆர்டர் வந்துள்ளது. பொம்மை நன்றாக இருந்தால் கூடுதலாக ஆர்டர் செய்வதாகவும் கூறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT