பொதுமக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 90 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 191 தனியார் ரத்த வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு 8 லட்சத்து 63 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அரசு ரத்த வங்கிகளில் மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் சேகரிக்கப்பட்டுள்ளது.
அரசு ரத்த வங்கிகள் சார்பில் கடந்த ஆண்டு 4,118 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடப்ப ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் 100 சதவீத இலக்கை தமிழகம் அடையவும், விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், பொதுமக்கள் பெருமளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.