குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் கொத்தடிமையாக சிக்கிக் கொண்ட கம்பம் இளைஞர் சதாம் உசேன், அங்கிருந்து தப்பி சென்னை திரும்பினார். ‘பிழைப்புக் காக வெளிநாடு செல்வோர் எனது அனுபவத்தை பாடமாக கொள்ள வேண்டும்’ என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (25), ஓட்டுநர் வேலைக்காக குவைத் சென்றார். அங்கு அவரை, ஒட்டகம் மேய்க்கச் சொல்லி அரபிக்கள் அடித்து துன்புறுத்தினர். சதாம் உசேனின் துயர நிலை குறித்து ‘தி இந்து’ தொடர்ச்சியாக செய்தி களை வெளியிட்டது. இந்தச் சூழ லில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் சதாம் உசேன் நேற்று நாடு திரும்பினார்.
சென்னை விமான நிலை யத்தில் ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
எங்களது குடும்பம் பெரியது. அப்பா நிலத் தரகராக உள்ளார். எனது அண்ணன் இஸ்மாயில் குவைத்தில் வேலை செய்கிறார். நான் கம்பத்தில் லாரி ஓட்டிக்கொண் டிருந்தேன். குடும்பத்தில் பொரு ளாதார நெருக்கடிகள் அதிகரித்த தால் நானும் குவைத் செல்ல விரும்பினேன். எனது அண்ணன் மூலம் காஜா மைதீன் என்பவரை அணுகினேன். மாதம் 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தரு வதாகவும், அதற்கு ரூ.1 லட்சம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்.
கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி குவைத் சென்றேன். இராக் எல்லை அருகேயுள்ள பாலைவனத்தில் என்னை கொண்டு சென்றுவிட்டனர். அங்கு ஒட்டகம் மேய்க்கச் சொன்னார்கள். நான் மறுக்கவே அரபியும், சுல்தானிகளும் என்னை அடித்து உதைத்தனர். காவல் அதிகாரி ஒருவரும் என்னை மிரட்டினார். தினமும் 2 மைதா ரொட்டிகள் மட்டுமே கொடுத்தனர்.
என்னை கண்காணிக்க 2 கங் காணிகள் எப்போதும் உடனிருந்த னர். நான் பட்ட துன்பத்தை ‘வாட்ஸ் அப்’ மூலம் பகிர்ந்தேன். இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டது. ஒருநாள் அதிகாலை கங்காணிகளில் ஒருவர் ஒட்டகத் துக்கு உணவு வைக்க புறப்பட்டார். இன்னொருவர் தூங்கிக் கொண்டி ருந்ததால் அங்கிருந்து தப்பி 8 கி.மீ. தூரம் நடந்து சாலைப் பகுதிக்கு வந்தேன்.
பின்னர், இந்திய தூதரகத்துக்கு சென்று, அங்கிருந்த அதிகாரி களிடம் நடந்ததை கூறினேன். அவர்கள் என் பாஸ்போர்ட்டை பெற்றுத் தந்தனர். இதற்காக கம்பம் எஸ்.ஐ சுல்தான் பாட்ஷாவும் உதவி செய்தார். இதையடுத்து எனது அண்ணன் தங்கியிருந்த இடத்தில் தங்கினேன். சொந்த ஊருக்கு திரும்பலாம் என்றால் பக்ரீத் நேரத்தில் விமான டிக்கெட் விலை இரு மடங்கானது.
என்னிடம் ரூ.10 ஆயிரம் மட் டுமே இருந்தது. இதுபற்றி ‘தி இந்து’ மீண்டும் செய்தி வெளியிட்டது. அமெரிக்காவில் இருந்து ஒருவர், கத்தாரில் இருந்து 3 பேர், குவைத் தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றின் மேலாளர் என 10-க்கும் அதிகமானோர் உதவ முன்வந்தனர்.
எனது அண்ணனின் நண்பர் ஒருவர் மூலம் டிக்கெட் கிடைத்தது. இப்போது இந்தியா வந்துள்ளேன். ஏதோ புது ஜென்மம் எடுத்ததுபோல உள்ளது. வெளிநாடு போக நினைக்கும் இளைஞர்கள் எந்த வேலைக்கு செல்கிறோம், முகவர் எப்படி என்பதை ஆராய்ந்து அதன் பின்னர் அங்கு செல்ல வேண்டும்.
என்னைப் போலவே, ஓட்டுநர் வேலைக்காக சென்ற 3 பேரும், வீட்டு வேலைக்காக சென்ற யாஸ் மின் என்ற பெண்ணும் குவைத்தில் வாடி வருகின்றனர். அவர்களும் காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு சதாம் உசேன் கூறினார்.