தமிழகம்

உழுதவன் கணக்கு பார்த்தால் சோற்றில் கை வைக்க முடியாது- குமரி விவசாயியின் புள்ளிவிபரம் சொல்லும் பாடம்

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950 காலக் கட்டங்களில் 55 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, இப்போது அறுவடையாகி கொண்டிருக்கும் கன்னிப் பூ சாகுபடியில் 8350 ஹெக்டேராக சுருங்கி நிற்கிறது. உழுவதும், அறுப்பதையும் மட்டுமே செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது வரவு, செலவு கணக்குகளை தங்களுக்குள் விவாதித்து கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்றனர்.

வீட்டுமனைகள்

தமிழக அளவில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக அதிகளவு நெல் சாகுபடி நடைபெற்ற மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியதன் விளைவாக தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. நெல்லில் போதிய விலை இன்மையால் சிலர் மாற்று பயிருக்கும் மாறியுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் அவர்களுக்கான லாபக் கணக்கை தங்களுக்குள் கூடி விவாதித்து அரசுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போதிய லாபம் இல்லை

விவசாயிகளிடம் பரப்புரையில் ஈடுபட்டு வரும் முன்னோடி விவசாயி துவரங்காட்டை சேர்ந்த செண்பகசேகரனிடம் பேசியபோது, ‘இன்னிக்கு விவசாயத்துல போதிய லாபம் இல்லை. இந்த கன்னிப் பூ சாகுபடியே கண்ணை கட்டிருச்சு. ஒரு ஏக்கருக்கு நாற்று உற்பத்தி செய்ய நாற்றங்கால் உழவுக்கு ரூ.1500, 20 கிலோ விதைக்கு ரூ. 630, விதை நேர்த்திக்கு ரூ.50, நாற்றுப் பாவ கூலி ரூ.700, குருனை மருந்துக்கு ரூ.60-ன்னு மொத்தமா 2940 ரூபாய் ஆகுது. நடவு வயல் தயார் செய்ய ரூ.5300 ஆகுது. இதுல வேலையாட்கள் கூலி, மரம் அடிக்குற செலவு எல்லாம் சேர்ந்திடும்.

எங்க பகுதி முழுசுக்கும் பாரம்பரிய நடவு தான். 21 மரக்கா கொண்ட ஒரு ஏக்கர் நடவுக்கு ரூ.3150 செலவு ஆகுது. உரத்தை பொறுத்தமட்டில் அடியுரத்துக்கு ரூ.1440, மேல் உரத்துக்கு ரூ.2340 செலவாகுது. களை எடுக்க ரூ.1380, பயிர் பாதுகாப்பு மருந்துகள், கூலிக்கு ரூ.750, அறுவடைக்கு வயலை ஊத்தங்கால் போட்டு தயார் செய்ய ரூ.450 செலவாகிறது.

கூட்டி கழித்து பார்த்தால்..

அறுவடை கூலியை பொறுத்தமட்டில் அறுவடை வண்டி வாடகை 2000 ரூபாய் இருக்கு. அறுத்த நெல்லை வயல்ல இருந்து ஒரு ஏக்கரை மூணு முறையா கொண்டு வீட்ல சேர்க்க டிராக்டர் வாடகை ரூ.750 இருக்கு. பயிரு வயல்ல இருக்க 4 மாசத்துக்கும் பராமரிப்பு செலவு மாசம் ரூ.300 என ரூ.1200 வரை ஆயிடுது.

இதுபோக சில்லறை செலவு, மூட்டை கட்டி கிட்டங்கிக்கு கொண்டு போற செலவெல்லாம் தனி. கூட்டி கழிச்சு பார்த்தா ஏக்கருக்கு 36,500 ரூபாய்க்கு 45 மூட்டை நெல்லு விலை போகுது. இதுல செலவு மட்டும் ரூ.22,600 ஆகுது. 6 மாச உழைப்புல வர்ற வருமானம் வெறும் ரூ.16,440 தான்.

இதுபோக வைக்கோல் விற்ற பணம் ரூ.2000 கிடைக்கும். அது வாடகைக்கே சரியா போயிடும்.

கொள்முதல் செய்வதில்லை

இந்த கணக்கு கூட சொந்த நிலம் வைச்சுருக்கவங்களுக்குத் தான். சொந்தமா நிலம் வைச்சுருந்தா மாசம் ரூ.2406 கிடைக்கும்.

குத்தகைக்கு எடுத்து பண்ணா இதுல ரூ.8000 பக்கம் குறையும். உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது, உழுதவனுக்கு உழவு கம்பு தான் மிஞ்சும்ன்னு சொல்லுற சொலவடையெல்லாம் வெறும் வார்த்தையில்ல, சம்சாரிங்க வாழ்க்கை.

இதே நாங்க ஒரு ஏக்கரை பிளாட் போட்டா ரூ.15 லட்சம் கிடைக்கும். அதை விரும்பாமத்தான் விவசாயத்தை நேசிச்சு பண்ணிட்டு இருக்கோம்.

இவ்வளவு பாடுபட்டு விளைய வைச்சாலும் அரசு ஈரப்பதத்தை காரணம் காட்டி எங்க நெல்லை கொள்முதல் செய்றதில்லை. வெளி மார்க்கெட்ல விற்கும் போது இன்னும் விலை குறையுது.

சம்சாரிங்க கணக்கு பார்த்தா இங்க யாரும் சோற்றில் கைவைக்க முடியாது. நேரத்துக்கு ஒரு மாத்திரை தான்.

இனியும் அரசு நிர்வாகங்கள் மவுனமா இருந்துச்சுன்னா விவசாயத்தை கைவிடுவதை தவிர வேற வழியில்லை’ என்றார் அவர்.

SCROLL FOR NEXT