நாகர்கோவில் காசி மீதான வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பெண் டாக்டர் உள்பட பல பெண்களை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி ஆபாசபடம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக காசியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காசி சிறையிலிருந்தபடி உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஏப்ரல் 25-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கோட்டாறு காவல் நிலையத்தில் பதிவான மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டேன். பின்னர் என் மீது புகார் அளிக்கலாம் என போலீஸார் பொது அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து நேசமணிநகர், வடசேரி காவல் நிலையங்களிலும் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
என் வழக்கில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக்கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் மே 13-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. என் வழக்கில் ஆக. 5-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நாகர்கோவில் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் என் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. என் தரப்பு வாதத்தை வெளிப்படுத்தவும், எனக்கு சட்ட உதவி வழங்கவும் வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் வழக்கில் என் தரப்பு வாதங்களை முன்வைக்க முடியவில்லை.
ஒரு தரப்புக்கு சட்ட உதவி இல்லாமல் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவது நியாயமற்றது. அது அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே, என் மீதான வழக்குகளின் விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றவும், அதுவரை நாகர்கோவில் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையுடன் காசியின் தந்தை தங்கப்பாண்டியனும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காசி, தங்கப்பாண்டியன் இருவர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.