பொதுமக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கும் சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசியக்கட்சிகள் அனைத்து விதிகளையும் மீறும்போது அபராதம் விதிப்பதில்லையே ஏன் என சென்னை மாநகராட்சி ஆணையரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
சென்னையில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இருவரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசி, ஊடகங்கள் இதை பொதுமக்களிடம் கொண்டு செல்லவேண்டும், பொதுமக்களிடம் ஒருவித அலட்சியம் வந்துள்ளது, இனி நடவடிக்கை கடுமையாகும் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், ''பொதுமக்களிடம் மட்டும் அபராதம் வசூலிக்கும்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், தேசியக்கட்சிகள் யாருமே விதியைக் கடைப்பிடிக்காமல் மீறுகிறார்கள். அங்கு மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை'' என்று கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், ''தற்போது முகக்கவசம் அணிவதன் அவசியம் என்பதை பொதுமக்களிடம் கொண்டு செல்லவே இந்தச் சந்திப்பு. வேறு வகையில் செய்தி மாறிவிடக்கூடாது'' எனக் கூறி சமாளித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் இருவரும் அளித்த பேட்டி வருமாறு:
முகக்கவசம், தனி மனித இடைவெளியில்லாமல் அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டமாகப் போராட்டம், கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
இது அனைவரையும் பாதிக்கும் நோய். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல கோயில், மருத்துவமனைகள், மத ரீதியான, அரசியல் ரீதியான எந்தக் கூட்டமும் இருக்கக்கூடாது என்பதுதான் அரசு உத்தரவு. இதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. அனைவரையும் அழைத்துச் சொல்லியிருக்கிறோம். அதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும்..
அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் பொதுமக்களிடம் கடுமை காட்டி அபராதம் விதிக்கிறீர்களே. ஏன்?
அரசியல் கட்சிகளிடமும் நடவடிக்கை எடுக்கப்போகிறோம். ஒன்று கூடுவதற்கு எப்போதும் அனுமதி கொடுப்பதில்லை. அதையும் மீறிக் கூடினால் அவர்களுக்கு அறிவுரை சொல்கிறோம். அதையும் மீறி நடத்தினால் இனி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
நேற்று முதல்வர் நடத்திய கூட்டத்திலும் வழிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை. எதிர்க்கட்சிகள், தேசியக் கட்சிகளும் கடைப்பிடிப்பதில்லையே. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, “இந்தக் கூட்டத்தின் நோக்கம் பாதுகாப்பு நடைமுறைகள் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்கிற தகவலை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. இதுபோன்ற கேள்விகள் வேறுவிதமான தகவலைத்தான் கொண்டு செல்லும்.
சமீபகாலமாக தனிமைப்படுத்துதல் மையம் அதிகரிக்கப்பட்டுள்ளதே. ஏன்?
புதிதாக ஒருவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் உருவானாலும், ஒரே தெருவில் 3 வீட்டில் தனித்தனியாகத் தொற்று இருந்தால் அல்லது குறைந்தபட்சம் 5 பேருக்கு அந்தத்தெருவில் இருந்தால் அது தனிமைப்படுத்தப்படும் மையமாக கடைப்பிடிக்கப்படும் என விதி உள்ளது. ஆனால் சமீபகாலமாக க்ளஸ்டர் எனப்படும் மொத்தத் தொற்று வராததால் தனிமைப்படுத்துதல் மையம் குறைக்கப்பட்டது.
சமீபத்தில் மருத்துவ நிபுணர்கள் என்ன ஆலோசனை சொன்னார்கள் என்றால் ஒரு தெருவில் 2, 3 பேர் இருந்தாலும் அங்கும் தனிமைப்படுத்துதலை அமல்படுத்தலாம் என ஆலோசனை கூறியதால் அவ்வாறு தற்போது அதிகரித்து வருகிறோம்.
தகரம் அடிப்பது பற்றி சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?
முன்னர் ஒரு தெருவிலேயே தகரம் அடித்தோம், அது பலரையும் பாதிக்கலாம் என்பதால் வீட்டில் அடிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதிலும் தவறு ஏற்பட்டதாகப் புகார் எழுந்ததால் அதையும் நிறுத்தச் சொல்லியிருக்கிறோம். தற்போது சிறிய அளவில் ஒரு தெருவில் பாதி அளவில் அடைப்பது போன்று மாற்றியுள்ளோம்.
தனி நபர் இல்லங்களில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிறது. சென்னையில் 12 லட்சம் வீடுகள் உள்ளன. எங்காவது ஒன்றிரண்டு நடந்தால் அதைக் கவனத்துக்குக் கொண்டு வந்தால் சரி செய்துவிடுவோம்.
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் இங்கு ஒன்றுமில்லை. அண்டை மாநிலங்களில்தான் உள்ளது எனப் பொதுமக்களிடம் அலட்சியம் வந்துள்ளது. அது கூடாது . முறையாக கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்கிற செய்தியைக் கொண்டு செல்வதே இந்தச் சந்திப்பின் நோக்கம்.
நோய்த்தொற்று இரண்டு மடங்காக எத்தனை நாட்களாகும் என்பது குறித்து மத்திய சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் 14 நாட்கள் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை இரட்டிப்பாகும் நிலை 93 நாட்கள் ஆகிறது. இது மிகச் சிறப்பான விஷயம். சில மண்டலங்களில் 160 நாட்கள் வரை உள்ளது. இதற்கு காரணம் சிறப்பான கண்காணிப்பு தான்.
அதேபோன்று இறப்பு விகிதம் சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 45 நாட்களுக்கு முன் 2.26% இருந்தது. இன்றைய தேதியில் அது 1.88% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் லாக்டவுன் மீண்டும் வரும் என்று பரப்பப்படுகிறதே?
இல்லை, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள், ஒவ்வொரு துறை சார்ந்து மத்திய அரசு, மாநில அரசின் துறை சார்ந்து ஆலோசனை நடத்தி அதன்படிதான் நடக்கும். ஆகவே, தயவுசெய்து அரசின் அதிகாரபூர்வத் தகவலை மட்டுமே நம்புங்கள். வாட்ஸ் அப் தகவலை, சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை நம்பாதீர்கள்.
இவ்வாறு அவர்கள் பதிலளித்தார்.