உதகை-குன்னூர் இடையே அக்டோபர் 10-ம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது பல தளர்வுகளுடன் இம்மாதம் 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தளர்வுகளில் சுற்றுலாத்துறையை கருத்தில் கொண்டு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகளும் கடந்த மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடு சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்த மலை ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா ஆர்வலர்களிடம் ஏற்பட்டிருந்தது. தற்போது சுற்றுலா நடவடிக்கைகைள் தொடங்கியுள்ளதால் மக்கள் ஆறுதலடைந்துள்ளனர்.
இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நீலகிரி மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். நாடு முழுவதும் ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில், "மலை ரயிலை இயக்க ரயில்வே அமைச்சம் அனுமதி அளிக்க வேண்டும். மலை ரயிலில் குறிப்பிட்டுள்ள அளவே பயணிகள் பயணிக்க முடியும் என்ற நிலையில், தனிமனித இடைவெளி மற்றும் கரோனா வழிமுறைகளை எளிதாக கடைப்பிடிக்க முடியும். மலை ரயில் சேவை தொடங்கினால், மாவட்டத்தில் மீண்டும் சுற்றுலா மேம்படும். மேலும், சரிந்த பொருளாதாரம் மீட்கப்படும்" என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் உதகை-குன்னூர் இடையே மலை ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்ட கூடுதல் கோட்ட மேலாளர் அ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் முதற்கட்டமாக உதகை-குன்னூர் இடையே மலை ரயில் இயக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 1-ம் தேதி கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், "கரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரி மலை ரயில் சேவை கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டும் நிலையில், வரும் 10-ம் தேதி முதல் உதகை-குன்னூர் இடையே தினமும் மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை நீலகிரி மாவட்டத்துக்குள் மட்டுமே இயக்கப்படுவதால், சுற்றுலாப்பயணிகள் உரிய முன்னெச்சரிக்கையுடன் பயணிக்கலாம். எனவே, மலை ரயில் சேவையை தொடங்க மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உதகை-குன்னூர் இடையே மலை ரயிலை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், வரும் 10-ம் தேதி முதல் உதகை குன்னூர் இடையே தினமும் நான்கு முறை மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 7.45 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் மலை ரயில் 9.05 மணிக்கு உதகையை வந்தடையும். காலை 9.15 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு காலை 10.25 மணிக்கு குன்னூர் சென்றடையும்.
இதே போல பகல் 12.35 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் மலை ரயில் மதியம் 1.50 மணிக்கு உதகையை வந்து சேரும். பின்னர் மதியம் 2 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு குன்னூரை சென்றடையும்.
இதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட கூடுதல் கோட்ட மேலாளர் அ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.