சரத்குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப்படிப்பு; கல்வித் தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும்: சரத்குமார்

செய்திப்பிரிவு

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சரத்குமார் இன்று (அக். 08) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ் மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது.

முதுகலைப் பட்டயப்படிப்புக்கான அறிவிப்பில், சேர்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டமும் அவற்றோடு சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், செம்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் செயல் மட்டுமன்றி, தமிழர்களின் பண்டைய கலாச்சார, நாகரிக, வரலாற்று அடையாளங்களை மறைக்கும் செயல் என்பதால், முதுகலைப் பட்டயப்படிப்பு கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT