தமிழகம்

தமிழ் மொழியைப் புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பு: உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

கி.மகாராஜன்

தமிழ் மொழியைப் புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதை மனுவாகத் தாக்கல் செய்தால், நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்மொழி புறக்கணிக்கபட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து தமிழ் மொழியை இணைத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்/

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் மற்றும் சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும்" என்றும் இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" எனவும் வழக்கறிஞர் அழகுமணி, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக முறையீடு செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவாகத் தாக்கல் செய்யவும், இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாகத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT