கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தன் மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் மணப்பெண்ணின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மணப்பெண் சவுந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு (34). இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சவுந்தர்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சவுந்தர்யா திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி திடீரென சவுந்தர்யா வீட்டிலிருந்து மாயமானார்.
இந்நிலையில் மறுநாள் காலை பிரபு - சவுந்தர்யா திருமணம் நடைபெற்றது. அவர்களின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதைக் கண்டித்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருவம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் ஏற்கப்படவில்லை எனத் தீக்குளிக்க முயன்றார்.
இந்நிலையில் சவுந்தர்யாவைத் தான் காதலித்ததாகவும், அவரும் தன்னைக் காதலித்ததாகவும், முறைப்படி சவுந்தர்யா வீட்டிற்குப் பெற்றோருடன் சென்று பெண் கேட்டு அவர்கள் சம்மதிக்காததால் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் சவுந்தர்யாவை மணமுடித்ததாகவும் பிரபு காணொலி வெளியிட்டார். அப்போது அவரது மனைவி சவுந்தர்யாவும் உடனிருந்தார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பிரபுவால் தன் மகள் கடத்தப்பட்டதாகக் கூறி, மகள் சவுந்தர்யாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் கடந்த 5-ம் தேதி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், “கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் எம்எல்ஏ பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிக் கடத்திவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் அக்.7-ல் இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் கடத்தப்படவில்லை, விருப்பப்பட்டே பிரபுவை மணந்தேன் என சவுந்தர்யாவும் தனியாக காணொலி வெளியிட்டார்.
கரோனா தொற்று காரணமாக ஆட்கொணர்வு மனுக்கள் காணொலியிலேயே விசாரிக்கப்பட்டன. கடந்த 5-ம் தேதி முதல் ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் அமர்வு நேரடியாக அழைத்து விசாரிக்கும் நடைமுறை தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தாக்கல் செய்த மனு மீது விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று மீண்டும் முறையீடு செய்தார்.
ஆனால், வழக்கை நாளை மதியம் விசாரிப்பதாகவும், சவுந்தர்யாவின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள அவரை நாளை மதியம் 2.30 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் அல்லது ஆஜர்படுத்தாவிட்டால் அதுகுறித்த விளக்கத்தை காவல்துறை அளிக்கவேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சவுந்தர்யா அளிக்கும் வாக்குமூலத்தை அடுத்தே அடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிடும்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, ''உயர் நீதிமன்ற உத்தரவை மதிப்பது எனது கடமை. சவுந்தர்யா விருப்பப்பட்டுதான் வந்தார். சவுந்தர்யாவின் தந்தையை யாரோ இயக்குகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.