கோப்புப்படம் 
தமிழகம்

5 மாதங்களாக சராசரியைவிட அதிக மழை பெய்ததால் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக இயல்பான அளவை விட கூடுதல் மழை பெய்துள்ளதால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 874.86 மிமீ. இந்த ஆண்டு தொடக்கம் முதலே, தொடர்ந்து 4 மாதங்களாக சராசரியைவிட மிகவும் குறைவாக மழை பெய்தது. 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை சராசரி மழை அளவும், பெய்த மழை விவரம் அடைப்புக்குறிக்குள் மிமீ அளவில்:

ஜனவரி-22.40 (4.89), பிப்ரவரி-13(0), மார்ச் 20.6 (4.05)ஏப்ரல்-59.8(23.5). மொத்தமாக 115 மிமீ சராசரி அளவில் 32 மிமீ மட்டுமே மழை பெய்தது. அதேநேரம் தென்மேற்குப் பருவமழைக்காலமான மே மாதம் முதல் 5 மாதங்களாகத் தொடர்ந்து சராசரி அளவைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. சராசரி அளவும், பெய்துள்ள மழை விவரம் அடைப்புக்குறிக்குள் மிமீ அளவில்: மே-63.8(84.62), ஜூன்-39.8(73.7), ஜூலை-44.10(87.33), ஆகஸ்ட்-96.16(97.03), செப்.-108.3(162.48). இந்த 5 மாதங்களில் இயல்பான அளவைவிட 153 மிமீ வரை கூடுதல் மழை பெய்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் மொத்தம் 548.32 மிமீ மழை பெய்துள்ளது. அக்.-200.7 மிமீ, நவ.-147.6 மிமீ, டிச.58.6 மிமீ என 407 மிமீ என சராசரி மழை பெய்ய வேண்டும். ஏற்கெனவே கூடுதல் மழை பெய்துள்ள நிலையில், 326.54 மிமீ மழை பெய்தாலே இயல்பான அளவை எட்டிவிடலாம். வடகிழக்குப் பருவமழை தொடங்க வுள்ள நிலையில் இன்னும் கூடுதல் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து கூடுதல் மழை பெய்து வருவதால், இந்த ஆண்டு சராசரி அளவை விடக் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த 5 மாதங்களாகக் கூடுதல் மழை பெய்துள்ளதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக மதுரை நகரின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.

வறண்டு காணப்பட்ட கண் மாய், குளங்களில்கூட ஓரளவு நீர் நிறைந்துள்ளது. இதனால், வெளி நாட்டுப் பறவைகள் வலசை வரத் தொடங்கியுள்ளன.

2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சராசரி மழையைவிடக் குறைவாகவே பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT