வேலூர் அம்மணாங்குட்டை மயானப்பகுதியில் குப்பை கொட்டி எரிக்கப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் மாநகராட்சி வாகனத்தை நேற்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்துக்காக 15 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என மொத்தம் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் அந்தந்த மண்டலங்களில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஒரு சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் பாலாற்றங்கரையிலும் காலி இடங்களிலும் கொட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் சலவன்பேட்டை அம் மணாங்குட்டை பகுதியில் மயானம் உள்ளது.
இந்த மயானப்பகுதி அருகாமையில் உள்ள காலி இடத்தில் மாநகராட்சி தூய்மைப்பணி யாளர்கள் குப்பைக்கழிவுகளை கொட்டி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட குப்பைக்கழிவுகளை மாநகராட்சி வாகனத்தில் கொண்டு வந்து அம்மணாங்குட்டை மயானப்பகுதி அருகே மொத்தமாக கொட்டி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அங்கு புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாநகராட்சி வாகனத்தை நேற்று சிறைபிடித்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "சலவன்பேட்டை, குட்டைமேடு, கொசப்பேட்டை, அம்மணாங்குட்டை, சாஸ்திரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் அம்மணாங்குட்டை மயானப்பகுதி அருகே கொட்டப்பட்டு வருகிறது.குப்பைக்கழிவுகள் மலைபோல் குவியும்போது, அதற்கு மாநகராட்சி ஊழியர்களே தீ வைக்கின்றனர்.
இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைக்கழிவுகளால் இங்கு பன்றிகளும் நாய்களும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இப்பகுதியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்களுக்கு நோய் தொற்றை பரப்பும் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுகிறதா? என தெரியவில்லை. இதனால், பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் துறை யினர், மாநகராட்சி மண்டல அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நட வடிக்கை எடுப்பதாகவும், குப்பை கொட்டாதபடி பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர். இதனையேற்று, பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.