அரசியல் கட்சிகள் கரோனா பரவாமல் தடுக்க அரசின் சட்டங்களையும் கோட்பாடுகளையும் மீறாமல் செயல்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 8) வெளியிட்ட அறிக்கை:
"அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை பொது நலன் கருதி கரோனா பரவாமல் தடுக்க அரசின் சட்டங்களையும் கோட்பாடுகளையும் மீறாமல், முன்னெச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். தமிழகத்தில் நேற்று மட்டும் கரோனா தொற்று எண்ணிக்கை 5,447ஆக இருக்கிறது. இறப்பு 67 ஆக இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் தொற்று எண்ணிக்கை 1,369 ஆக இருக்கிறது.
குறிப்பாக, சென்னையில் ஒரு மாதக் காலத்தில் மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைய தொடங்கியது. ஆனால், தற்போது திடீர் என்று பத்து நாள்களுக்கு மேலாக கரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருக்கிறது. அதேபோல், நோய் கட்டுப்பாட்டு பகுதியிலும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த அதே நிலை தினசரி 15-ல் இருந்து 20 பேர் வரை கரோனா தொற்றால் இறந்தவர்கள் செய்தி மீண்டும் தொடர்கிறது. இது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு பொதுமக்களுக்கு பொருளாதார நிமித்தமாக பல தீர்வுகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஜனநாயக நாட்டில் தங்கள் நியாயமான கருத்துக்களை சொல்லவும், எதிர்ப்பை தெரிவிக்கவும், அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் முறையான அனுமதிப் பெற்று பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டும்.
ஆனால், இவை பல நேரங்களில் பல இடங்களில் கட்டுப்பாட்டை மீறக்கூடிய நிலைகளிலேயே நடைபெறுகிறது. மக்களுக்கான போராட்டம் என்ற நிலை மாறி கரோனாவினுடைய கோரப்பிடியில் மீண்டும் மக்களை சிக்கவைத்து விடும் சூழல் ஏற்படும் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். படிப்படியாக கரோனா கட்டுக்குள் வரும் சூழல் ஏற்படும் போது கட்டுப்பாட்டுடன் கரோனா எச்சரிக்கைகளை மீறாமல் அரசின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறும், சட்டங்களை மீறாமலும் குறித்த இடத்திலே குறித்த நபர்களோடு போராட்ட நோக்கத்தினுடைய விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், அறிவுரை சொல்லக்கூடிய அரசியல் கட்சிகளே மறுபுறம் கரோனா பரவலுக்குக் காரணமாக ஆகிவிடக் கூடாது.
ஆகவே, அரசியல் கட்சிகள் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இதுவே நாம் நேசிக்கும் நாட்டுக்கும், மக்களுக்கு பயனுள்ளதாக அமையும், நன்மைபயக்கும்.
ஆகவே, அரசியல் கட்சிகள் கரோனா மென்மேலும் பரவாமல் தடுக்க அரசின் சட்டங்களையும் கோட்பாடுகளையும் மீறாமல் செயல்பட வேண்டும் என்று மக்கள் நலன் கருதி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.