வேளாண் சட்டங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காகவே தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் மத்திய ஆட்சியில் சமீபகாலமாக கொண்டு வரப்படுகின்ற திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால், வேளாண் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஒரு சில சட்டங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.
இச்சட்டத்தில் என்ன மாதிரியான நற்பலன்கள் உள்ளன என்பதை மூடி மறைக்கிறார்கள்.இந்த சட்டத்தின் மூலம் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் பசியைப் போக்கவும் முடியும்.
ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை மகசூல் கிடைத்தால் பஞ்சமிருக்காது என விவசாயிகள் கருதுகிறோம். அத்தகைய நிலையை உருவாக்கத்தான் இந்த வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை குறை கூறுபவர்கள், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படவில்லை என்கின்றனர். ஆனால், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தி விட்டது அதன் பின்னரும் இத்திட்டத்தை எதிர்த்து போராடுவது நியாயமில்லை.
கடந்த காலங்களில் மார்க்கெட்டிங் கமிட்டி உருவாக்கப்பட்டு விவசாயிகளின் உற்பத்தி பொருள் பொதுவான இடத்தில் வைக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் ஏல முறையில் கொள்முதல் செய்ய வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டது.
அத்தகைய நிலையை இன்னும்மேன்மைப்படுத்தி உற்பத்திப் பொருளை எங்கு வேண்டுமானாலும் விவசாயிகளே நேரில் எடுத்துசென்று விற்பனை செய்யலாம் என்ற வாய்ப்பை வேளாண் சட்டம் கொடுத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.
கடந்த காலங்களில் லெவி என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வெளியூர்களுக்கு உற்பத்திப் பொருட்கள் எடுத்துச் சென்று விற்க முடியாது என்ற நிலை இருந்தது. அதனை இந்த சட்டம் மாற்றி அமைத்துள்ளது. எனவே, அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டம் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.