தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிவகங்கை பூங்கா குளம், அய்யன் குளம், சாமந்தான் குளம் ஆகியவற்றை சீரமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த குளங்களுக்கான நீர்வரத்து வாய்க்கால்களை கண்டறியும் பணியில் மாநகராட்சி பொறியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதில், பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை பூங்கா குளத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்யன் குளத்துக்கு மன்னர் காலத்தில் இருந்த நீர்வழிச் சுரங்கப்பாதை தற்போது கண்டறியப்பட்டு, அதிலிருந்த அடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நீர்வழிச் சுரங்கப்பாதையில் 7 இடங்களில் ஆள் இறங்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 இடங்களை கண்டறிந்துள்ளனர். மீதமுள்ள 4 பகுதிகள் எங்கு உள்ளன என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் அய்யன்குளத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.