வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு 45,161 டன் யூரியா உரம் நேற்று வந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு, ராபி பருவம் தொடங்கியுள்ளது. வழக்கமாக ராபி பருவத்தில்தான், தமிழகம் முழுவதும் நெல் சாகுபடிப் பணி அதிகளவில் நடைபெறும். தென் மேற்கு பருவமழைக்காலத்தில் போதிய மழை கைகொடுத்ததால், தமிழகத்தின் பெரிய அணைகளான மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், பேச்சிப்பாறை போன்றவற்றில் இப்போதே போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்காதபோதும், கையிருப்பு நீரைக் கொண்டு நெல் சாகுபடி பணிகள் தொடங்கவுள்ளன.
எனவே, விவசாயிகளின் உரத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசிடம் இருந்து உர ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து ஐபிஎல் என்ற நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 45,161 டன் யூரியா உரம், கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சோ்ந்துஉள்ளது. இதில், தமிழகத்துக்கு 35,561 டன் யூரியா ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 ஆயிரம் டன் யூரியா உள்ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட யூரியாவை மூட்டைகளாக பேக்கிங் செய்யும் பணி தூத்துக்குடி குடோன்களில் மும்முரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் மற்றும் அதிகாரிகள் இப்பணியை நேற்று ஆய்வு செய்தனர். இவை லாரி, ரயில்கள் மூலம் பிற மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.