சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘‘கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 4 மாதங்களுக்கும் மொத்தமாக மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது. இவ்வாறு மொத்தமாக மின் கட்டணம் கணக்கீடு செய்யக்கூடாது. அதற்கு பதிலாக 2 மாதங்களுக்கு ஒரு பில் என தனித்தனியாகப் பிரித்து, அதில் ஏற்கெனவே செலுத்திய முந்தைய மாத கட்டணத்துக்கான யூனிட்டை கழித்துக் கொண்டு எஞ்சிய யூனிட்டுக்குரிய தொகையை வசூலிக்க வேண்டும்” என கோரியிருந்தார். ஆனால் அரசு தரப்பில், மின் கணக்கீட்டில் எந்த குளறுபடிகளும் இல்லை. ஏற்கெனவே முந்தைய மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையை மட்டுமே கழிக்க முடியும் என்றும் யூனிட்டைக் கழிக்க முடியாது எனவும் பதிலளித்து இருந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மின் கட்டண கணக்கீட்டில் எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர்எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அமர்வு, மறுஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.