தமிழகம்

அதிமுக முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதாவுக்கு பிறகு பழனிசாமி: சிலுவம்பாளையம் கிளை செயலாளராக தொடங்கிய பயணம்

கி.கணேஷ்

முதல்வர் வேட்பாளராக கடந்த 1991-ல் ஜெயலலிதா பெயரை அறிவித்து தேர்தலை சந்தித்த அதிமுக, அதற்கு பிறகு தற்போது முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது.

அதிமுகவை பொருத்தவரை, தொடக்கத்தில் இருந்தே முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு இல்லாமலேயே தேர்தல்களை சந்தித்தது. முதலில் கட்சி நிறுவனர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்குப் பிறகு, கடந்த 1991-ல்முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டு தேர்தலை அதிமுக சந்தித்தது. பிறகு 1996,2001, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும் முதல்வர்வேட்பாளர் யார் என்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவது இல்லை.தேர்தலில் வெற்றி பெற்ற காலங்களில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று வந்தார்.

தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில், இரட்டை தலைமையில் இயங்கும் அதிமுகவில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது. மாறி மாறி கருத்துகள், காரசார வாக்குவாதம், தொடர் பேச்சுவார்த்தை, தீவிரஆலோசனைகளுக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியே அடுத்ததேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954-ல் பிறந்தார். 1974 முதல் அதிமுக உறுப்பினராக உள்ள அவர், சிலுவம்பாளையம் கிளை செயலாளராக கட்சிப் பணியை தொடங்கினார். 1985-ல் எடப்பாடி ஒன்றியத்தில் அம்மா பேரவையை தொடங்கினார். 1989-ல் ஜெயலலிதா தலைமையிலான அணியில் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

1990-ல் சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர், 1991-ல் சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு நடந்த தேர்தலில் வென்று, எடப்பாடி எம்எல்ஏ ஆனார். 1992-96 காலகட்டத்தில் சேலம் மாவட்ட திருக்கோயில்கள் வாரிய தலைவர், 1993-96 காலகட்டத்தில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக செயல்பட்டார்.

1998-99ல் திருச்செங்கோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக பணியாற்றிய அவர், 2003-ல்தமிழ்நாடு சிமென்ட் கழக தலைவராக நியமிக்கப்பட்டார். 2011-ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016 தேர்தலில் அதே தொகுதியில் 4-வது முறையாக வென்று, ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் 2017 ஜனவரி 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, பிப்.16-ம்தேதி முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார்.

இதற்கிடையில், ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது, 2006-ல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், 2007-ல் அமைப்பு செயலாளர், 2014-ல் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிகளை பழனிசாமிக்கு வழங்கினார். 2017முதல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிகளையும் வகித்துவருகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT