மகேஷ் குமார் அகர்வால் 
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பாக போலீஸாருக்கு 6 அடுக்கு கரோனா தடுப்பு முகக்கவசம்: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்

செய்திப்பிரிவு

போலீஸாருக்கு 6 அடுக்கு கரோனாதடுப்பு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான்களை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் துறை சார்பாக, கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 23 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு, ஒரு நபருக்கு தலா 3 முகக்கவசங்கள் (6 அடுக்கு கொண்டது), 5 திரவ சுத்திகரிப்பான் பாட்டில்கள் மற்றும் ஒரு முக பாதுகாப்பு கேடயம் (ஃபேஸ் சீல்டு) அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக நேற்று காலை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டு, சென்னை மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு முகக்கவசத்தையும், திரவ சுத்திகரிப்பான் பாட்டில்களையும் வழங்கினார்.

மேற்கு மண்டல போலீஸார் சார்பாக அம்பத்தூர் காவல் மாவட்ட காவல் துணை ஆணையர் தீபா சத்யன், கிழக்கு மண்டலம் சார்பாக அயனாவரம் சரக உதவி ஆணையர் சீனிவாசன் ஆகியோர் முகக்கவசங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாருக்கும் முகக்கவசங்கள் அடங்கிய தொகுப்புகளை காவல் ஆணையர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர் ஏ.அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் எஸ்.விமலா,தர்பாபு, ஜி.நாகஜோதி, பெரோஷ்கான் அப்துல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT