தமிழகம்

பாஜக கூட்டணியில்தான் பாமக உள்ளது: முரளிதர ராவ் தகவல்

செய்திப்பிரிவு

பாஜக கூட்டணியில்தான் பாமக உள்ளது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக சார்பில் 38 தேர்தல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தமிழக பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதர ராவ் பங்கேற்றார். இக்கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 38 தேர்தல் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சிறு, குறு மற்றும் நடைபாதை வியாபாரிகள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவது எட்டாக் கனியாக உள்ளது. அவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள முந்த்ரா வங்கியின் கடன் திட்டம் குறித்து மக்களிடையே பிரபலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்காக 234 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சித் தொண்டர்கள் ஒரு லட்சம் பேருக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ள பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறவில்லை. எனவே, எங்கள் கூட்டணியில்தான் அக்கட்சி உள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகளும் எங்களுடன் இணைய உள்ளன. இலங்கை பிரச்சினையில் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT