திமுக தலைவர் கருணாநிதி மீது சட்டப்பேரவையில் அமைச்சர் வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுப்பிவைத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து அத்துறையின் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
‘‘கடந்த 25-ம் தேதி வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது தான் பேசாததை பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் எழுதியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். அமைச்சரின் இந்தப் புகார் சட்டப்பேரவையின் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படுகிறது’’ என பேரவைத் தலைவர் அறிவித்தார்.